Tuesday, November 29, 2011

கோவா திரைப்பட விழாவில் தமிழக மாணவர் படைப்புகள்!

கோவாவில் கடந்த நவம்பர் 23-ஆம் தொடங்கி, 42-ஆவது இந்திய பன்னாட்டு திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் புனே, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் இயங்கிவரும் மூன்று முக்கிய திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படைப்புகள் திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று (நவம்பர் 28) திரையிடப்பட்டன. 


சென்னையில் இயங்கிவரும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் நான்கு குறும்படங்கள் விழா நடைபெறும் மக்கினஸ் பேலஸ் அரங்கில் திரையிடப்பட்டன. டி.சுரேஷ்குமார் இயக்கிய ‘கருக்கு’, கண்ணன் இயக்கிய ‘அச்சுப்பிழை’, சுவிக்குமாரின் இயக்கத்தில் ‘முகாரி’, பாக்கியராஜ் இயக்கிய ‘பாட்டி நா’ ஆகிய நான்கு குறும்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. திரைப்படக்கல்லூரி பேராசிரியர் வி.எம்.ரவிராஜ், மாணவர்கள் சுரேஷ்குமார், மோகன் ஆகியோர் திரையிடலின் போது நினைவுப்பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். 




முன்னதாக திரையிடலையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “பன்னாட்டுத் திரைப்பட விழாவில் மாணவர்களின் படைப்புகளுக்கும் தனி இடம் அளித்தது மகிழ்ச்சிக்குரியது. மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறையின் கீழ் இயங்கும் கொல்கத்தா, புனே திரைப்படக் கல்லூரிகள் மட்டுமல்லாமல், முழுக்க முழுக்க தமிழக அரசால் மட்டுமே நடத்தப்படும் மிகவும் பழைமைவாய்ந்த எம்.ஜி.ஆர்.அரசு திரப்படக் கல்லூரிக்கும் இந்த சிறப்பு வழங்கப்பட்டிருப்பது பெருமைக்குரியதாகும். இதற்கென அமைக்கப்பட்ட குழுவின் பொறுப்பாளர் சென்னைக்கு வந்து, படங்களைப் பார்த்து தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.” என்று பேராசிரியர் வி.எம்.ரவிராஜ் தெரிவித்தார். கடந்த 22-ஆம் தேதி முதல் 30-க்கும் மேற்பட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் தமிழகத்திலிருந்து லீனா மணிமேகலை இயக்கிய ‘செங்கடல்’ என்ற திரைப்படமும், நடிகை ரேவதி, ‘தசாவதாரம்’ கலை இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் இயக்கிய குறும்படங்களும் திரையிடப்பட்டன.